×

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ள ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ள ஆந்திர முதலமைச்சருக்கு தமிழ்நாடு முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திர அரசு 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஆந்திர முதலமைச்சர் அவர்களே நடத்தியிருப்பது 1992ம் ஆண்டு பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து, குப்பம் என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். இதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜீவாதாரமாக பாலாறு விளங்குகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் மூலம்தான் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கிறது. 2006-ஆம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் பாலாறு பகுதி பாலைவனமாகி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக பாலாறு பாலைவனமாவதைத் தடுக்க வேண்டுமென்றால் சாதுரியமான, சாணக்கியத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

The post பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ள ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Andhra Chief Minister ,Chennai ,Former ,Tamil Nadu ,Andhra government ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...